தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் படப்பிடிப்பின்போது அடுத்தடுத்து காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவருவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பாலகிருஷ்ணா, கோபிசந்த் மலினேனி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் சில நாட்களுக்கு முன் ஆக் ஷன் காட்சியில் பங்கேற்றார். அப்போது அவருடைய முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல், ‘பெத்தி’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட மணிக்கட்டு காயம் காரணமாக, நடிகர் ராம் சரண் சமீபத்தில் கோவையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இப்போது அவர் குணமடைந்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் காயமடைந்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘டிராகன்’ என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் அவருக்குத் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் 6 முதல் 8 வாரங்கள் முழுமையாக ஓய்வெடுக்க, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த தகவலை அவரது குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் ஜூனியர் என்.டி.ஆரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது குழு விளக்கம் அளித்துள்ளது. இவர்கள் விரைவில் முழுமையாகக் குணமடைய ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.