தமிழ், தெலுங்கில் நடித்து வரும் சந்தீப் கிஷன், அடுத்து நடிக்கும் ‘கரிகாலா’ படத்தை யுகேந்தர் முனி இயக்குகிறார். ஸ்ரீசரண் பகாலா இசையமைக்கும் இப்படத்துக்கு பிரவீன் பங்காரி ஒளிப்பதிவு செய்கிறார். ஷைனிங் பிக்சர்ஸ் சார்பில் மகிதர் ரெட்டி, ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 2 பாகங்களாக இப்படம் உருவாகிறது. புராணம், கற்பனை, சாகசம் எனப் பல்வேறு அம்சங்களின் கலவையாக தயாராகும் இப்படத்தில் கேத்ரின் தெரசா, சாக் ஷி மடோல்கர், காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதா நாயகிகளாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பை தயாரிப்பாளர் ராஜசேகரின் தாயார் சத்யவதி தொடங்கி வைத்தார்.
சந்தீப் கிஷன் கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். கலை மீதான ஆர்வத்தின் காரணமாகவே ‘கரிகாலா’ மற்றும் ‘பவர் பெட்’ ஆகிய படங்களைத் தேர்ந்தெடுத்தேன். இந்த 2 படங்களும் எனது திரைப்பயணத்தின் சிறந்த படங்களாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.