காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ அடிப்படையில் அவரின் காதல், அரசியல் பயணம் பற்றி படம் தயாரிக்கப்படும் என தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஜக்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.
சங்கரெட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து தொகுதியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் படத் தயரிப்புக்காக தங்களால் ஆன பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர், ‘இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள தெலங்கானா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹரிபிரசாத் மேற்பார்வையில் 50 பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்’ என்றும் பரிந்துரைத்தார்.
மேலும் அவர் கூறுகையில், “படத்துக்கான தயாரிப்பு பணிகள் முடிந்ததும், படப்பிடிப்பைத் தொடங்கி வைக்க மாநில முதல்வர் ரெவந்த் ரெட்டி, தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகேஷ் குமார் கவுட் ஆகியோர் அழைக்கப்படுவார்கள்.
காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஒரு கடலைப் போல ஆழமானது. சோனியா காந்தி அதனை முழுமையாக ஆராய்ந்துள்ளார்” என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, சங்கரெட்டி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பளர் ஜுலகந்தி ஆஞ்சிநேயலு தனது பங்களிப்பாக ரூ.2 கோடி தருவதாக அறிவித்தார்.
திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் படம், சோனியா காந்தியின் வாழ்க்கை பயணத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மருமகள், ராஜீவ் காந்தியின் மனைவி, ராகுல் பிரியங்காவின் தாய் என பல்வேறு காலகட்டங்களை உள்ளடக்கி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.