துல்கர் சல்மான் நடித்து வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ருதிஹாசன்.
பவன் சாடினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆகாசம்லோ ஒக தாரா’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து வெளியிடப்பட்ட இரண்டு டீஸர்களுக்குமே இணையத்தில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதில் நாயகியாக சாத்விகா வீரவள்ளி நடித்துள்ளார்.
இதனிடையே ஸ்ருதிஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது கதாபாத்திரம் கொண்ட புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. இதன் மூலம் இப்படத்தில் துல்கர் சல்மானுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருப்பது உறுதியாகிறது. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வாயில் சிகரெட் உடன் ஸ்ருதிஹாசன் இருக்கும் போஸ்டரை வைத்து இணையத்தில் விவாதத்தை தொடங்கியிருக்கிறார்கள். இப்படத்தினை கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் ஆகியோர் இணைந்து வழங்க சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதன் ஒளிப்பதிவாளராக சுஜித் சாரங் மற்றும் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.