நடிகை ஸ்ரேயா ரெட்டி, பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் பிரம்மாண்டப் படமான ‘மகாகாளி’ படத்தில் நடித்து வருகிறார். பூஜா கொல்லூரு இயக்கும் இப்படம் ஜன.8-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்காகப் பழங்கால தற்காப்புக் கலையான களரிப்பயட்டு பயிற்சியைக் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரேயா ரெட்டி மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு பயிற்சியைத் தொடங்கிய அவர், வாரத்துக்கு சுமார் 12 முதல் 15 மணி நேரம் வரை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் களரிப் பயிற்சியின் வீடியோவை பகிர்ந்துள்ள ஸ்ரேயா ரெட்டி, களரி தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம் குறித்துக் கூறியுள்ளார்.
அதில், “ஒருகாலத்தில் எனது உடலுடனும் மனதுடனும் நடந்த போராட்ட மாகக் களரி தோன்றியது. படிப்படியாக மிகப்பெரிய பலமாக மாறி விட்டது. ஒவ்வொரு வீழ்ச்சியிலும், ஒவ்வொரு சவாலிலும் ஒவ்வொரு பாடத்திலும் களரி என்னை நிலைநிறுத்திக் கொள்ளக் கற்றுக்கொடுத்தது. என் மனமும் உடலும் வலிமையாகி இருக்கிறது.
களரிப்பயட்டு எனக்கு வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல; அது என் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது. இந்த தற்காப்புக் கலையைக் கற்றுக்கொண்டது என் வாழ்க்கையின் பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று. நான் எடுத்த மிகச் சிறந்த முடிவும் இதுதான்” என்று தெரிவித்துள்ளார்.