தென்னிந்திய சினிமா

திகில் படம் எடுக்க பேயாக மாறணுமா? - இயக்குநர் ராம் கோபால் வர்மா கேள்வி

செய்திப்பிரிவு

மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘வாரணாசி’ படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் டைட்டில் அறிவிப்பு நிகழ்ச்சியில், டீஸரை அகண்ட திரையில் வெளியிட முயன்ற போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், நிகழ்ச்சி தடைபட்டது.

அப்போது பேசிய ராஜமவுலி, “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், இங்கே பேசிய என் தந்தை, ஹனுமன் என்னை வழி நடத்துவதாகக் கூறினார். இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது எனக்குக் கோபம் வந்தது. இப்படித்தான் ஹனுமன் எனக்கு உதவுவாரா? என்றார். ராஜமவுலி இப்படிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராஷ்ட்ரிய வானரசேனா என்ற அமைப்பினர், ராஜமவுலி இந்துக் கடவுளை அவமதித்துவிட்டதாகக் கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர், தன் படத்துக்கு ‘வாரணாசி’ என்று தலைப்பிட்டு புராணக் கதாபாத்திரங் களைப் பயன்படுத்தியது ஏன்? என ராஜமவுலிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா, ராஜமவுலிக்கு எதிராகப் பரப்பப்படும் விமர்சனங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் வெளியிட்டப் பதிவில், “கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது குற்றமல்ல என்பதை விமர்சிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தாங்கள் நம்புவதாகச் சொல்லும் உரிமையைப் போலவே, நம்பவில்லை என்று சொல்லவும் அவருக்கு முழு உரிமை உண்டு.

இப்போது, ‘அவர் கடவுளை நம்பவில்லை என்றால், அவர் ஏன் தனது படங்களில் கடவுளைக் காட்டுகிறார்?’ என்று கேட்பது முட்டாள்தனமான வாதம். அந்த தர்க்கத்தின்படி, ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்க இயக்குநர் கேங்ஸ்டராக மாற வேண்டுமா, திகில் படம் எடுக்கப் பேயாக மாற வேண்டுமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT