‘ஐ அம் கேம்’ படத்தின் கதையைக் கேட்டதும் இதில் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன் என சம்யுக்தா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
இதில் நடிகர் கதிர் பேசுகையில்,‘‘‘ஐ அம் கேம்’ படம் நிறைய சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட வித்தியாசமான படமாக இருக்கும். இந்தப் படத்தில் கிரிக்கெட் அணி கேப்டனாக நடித்துள்ளேன். ஆனால் இதற்கு முன்பு நான் கிரிக்கெட் விளையாடிய அனுபவமே குறைவு.
பள்ளிக் காலத்தில் பேட் கிரிக்கெட் விளையாடியதோடு சரி; என்னை கேப்டனாக நடிக்க வைத்த இயக்குநரின் தைரியம் உண்மையிலேயே ஆச்சரியமானது’’என்றார்.
நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் பேசுகையில்,“சிறு வயதிலிருந்தே சினிமாவை ரசித்து வளர்ந்த எனக்கு, ஒரு படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வும் தாக்கமும் மிகவும் முக்கியம்.
அந்த வகையில், ‘ஐ அம் கேம்’ படத்தின் கதையை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் முதன்முறையாக கூறியபோதே, இதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்தேன்.
இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாகவும், எனது மனதைத் தொட்டதாகவும் இருந்தது. ஒரு காட்சிக்குத் தேவையான உணர்வை மிகக் குறுகிய நேரத்தில் வெளிப்படுத்த வேண்டியிருந்தது சவாலாக இருந்தாலும், அது நடிப்பில் எனக்கு நிறைய கற்றுத் தந்தது’’ என்றார்.
நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், “‘ஐ அம் கேம்’ படத்தைப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட அது ஒரு தமிழ் படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். இதில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் உருவான மிகப்பெரிய பட்ஜெட், பிரம்மாண்டமான தயாரிப்பு இதுதான்.
மிஷ்கின் இந்தப் படத்தின் முக்கியமான அங்கம்; அவரது அளவுக்கான உற்சாகமும் எனர்ஜியும் இன்றைய இளம் தலைமுறையினரிடமே அரிதாகத்தான் பார்க்க முடியும்.
ஜேக்ஸ் பிஜாயின் இசையில் இந்தப் படம் ஒரு அசத்தலான ஹிட் ஆல்பமாக அமையும். ஏற்கெனவே வெளியான பாடல்களைத் தாண்டி, படத்தில் ரசிகர்களை கவரும் மேலும் பல பாடல்கள் உள்ளன.
படம் முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இதில் காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லிங் மற்றும் கேமிங் என ரசிகர்களை கவரும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன’’ என்றார்.
துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து வேஃபரர் பிலிம்ஸ் பேனரில் தயாரித்துள்ள இப்படம், துல்கர் சல்மானின் 40-வது படமாகும்.
இந்தப் படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், காயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகும் இந்தப் படம் செப்டம்பர் 3-ம் தேதி திரைக்கு வருகிறது.