நடிகை ஆஷு ரெட்டி
திருமண ஆசை காட்டி, ரூ.9.35 கோடி மோசடி செய்ததாக தெலுங்கு நடிகை ஆஷு ரெட்டி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து, ஹைதராபாத் ஷேக்பேட்டையை சேர்ந்த சத்யநாராயண மூர்த்தி என்பவர் அளித்துள்ள புகாரில், “எனது மகன் தர்மேந்திரா லண்டனில் மென்பொறியாளராக இருக்கிறார். அவருக்கு ஆஷு ரெட்டி, 2018ம் ஆண்டு பழக்கமானார்.
திருமண ஆசை காட்டிய அவர், தர்மேந்திராவிடம் இருந்து ஐந்து கிலோ தங்கம், சொகுசு கார்கள் மற்றும் ரூ.1.80 கோடி மதிப்புள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைத் தனது பெயரில் எழுதி வாங்கினார். இதன் மொத்த மதிப்பு ரூ.9.35 கோடி. ஆஷு ரெட்டியின் சகோதரியும் ரூ.50 லட்சம் பெற்றுள்ளார். இவற்றைப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து, ஆஷு ரெட்டியிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறும், திருமணத்தின் பெயரில் கொடுக்கப்பட்ட தங்கத்தைத் திருப்பித் தருமாறும் கேட்டபோது மறுத்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹைதராபாத் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆஷு ரெட்டி, தவறான தகவல்களைப் பரப்பினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.