நடிகை ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவரகொண்டா திருமணம் நேற்றுமுன்தினம் உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் மார்ச் 4-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட இருவரும் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
முன்னதாக, திருமணத்துக்குப் பிறகு ராஷ்மிகா தன் கணவர் விஜய் தேவரகொண்டா குறித்து இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் கணவர் விஜய் தேவரகொண்டாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். உண்மையான அன்பு என்றால் என்ன என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்த மனிதர்.
நிம்மதியாக இருப்பது எப்படி என்று எனக்குக் காட்டியவர். பெரிய கனவுகள் காண்பது தவறில்லை என்று எனக்குச் சொல்லி, என்னால் அதிகம் சாதிக்க முடியும் என்று தொடர்ந்து நம்பிக்கை அளித்தவர். என்னுடைய நடனங்களைத் தடுக்காதவர். நண்பர்களுடன் பயணப்படுவதே உலகின் சிறந்த விஷயம் என்பதை எனக்கு உணர்த்தியவர். நம்புங்கள், அவரை பற்றி என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும்.
இன்று நான் எப்படிப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டேனோ, அப்படியான பெண்ணாக மாறியிருக்கிறேன்; அதற்குக் காரணம் நீங்கள்தான். உண்மையிலேயே நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். உங்கள் மேல் நான் வைத்திருக்கும் உணர்வுகளை விவரிக்க எப்போதும் வார்த்தைகள் போதாது.
அதை உங்களிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். இப்போது என் வாழ்க்கை முழுமையான அர்த்தத்தைப் பெறுகிறது. உங்கள் மனைவி என்று அழைக்கப்படுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். சிறந்த வாழ்க்கையை வாழ்வோம்” என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.