‘ரணபலி’ பட நாயகி ரஷ்மிகா மந்தனா, 400 குடும்பங்களை தத்தெடுத்து, அவர்களுக்கு மளிகைப் பொருள் தேவைக்கான உதவிகளை செய்துள்ளார்.
சமூகத்துக்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்ய விருப்புகிறவர்களுக்கு இது துண்டுதலாக இருக்கும் என தான் நம்புவதாக கூறி, இந்தத் தகவலை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிந்துள்ளார்.
தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் ஏற்று நடிக்கும் கதாபத்திரங்கள் ஏதோ ஒரு வகையில் நம்மை பாதிக்கின்றன அல்லது நம் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
எனக்கும் ஜெயம்மா கதாபாத்திரத்துக்கும் ஏதாவது ஒற்றுமை உண்டா என பலரும் என்னைக் கேட்கிறார்கள். அவர்களுக்கான எனது பதில், ‘ஆம்’ என்பதே. அந்த ஒற்றுமையில் இதுவும் ஒன்று. எனது இயல்பாக இருந்து வரும் இந்த விஷயம், ஜெயம்மாவின் இயல்பாகவும் இருக்கிறது.
நீங்கள் என்மீது பொழியும் அன்புக்காக இதை நான் தொடர்ந்து செய்வேன். இதுபோன்ற விஷயங்களை இதுவரை நான் வெளிப்படுத்தியது இல்லை. எனக்கும், என் குழுவைச் சேர்ந்த சிலருக்கும் தெரிந்தால் மட்டும் போதும் என நினைதிருந்தேன்.
ஆனால் இப்போது இந்த உதவியை நான் வெளியே சொல்வதற்கு காரணம், சமூகத்துக்கு பங்களிக்க நினைக்கும் சிலருக்கு இது உத்வேகம் அளிக்கும் என நான் நம்புகிறேன். அப்படி நடந்தால் மிகவும் மகிழ்வேன்.
உதவியை நாம் ஏன் இப்போதே தொடங்கக் கூடாது என நினைத்தேன். இன்று நான் 400 குடும்பங்களைத் தத்தெடுத்துள்ளேன். இந்த 400 குடும்பங்களுக்கும், மூன்று மாதங்களுக்கு மளிகை பொருட்கள் தேவைக்கான உதவிகளை செய்ய இருக்கிறேன். அடுத்த ஓராண்டுக்கு இந்த உதவி தொடரும். மளிகைப் பொருள்களுக்காக ஆகும் அந்தச் செலவை சேமித்து, அதை அவர்களின் எதிர்கால தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஒரு சிறு கருணை கூட யாரோ ஒருவரின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். அது அளவில் பெரிய விஷயமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாவற்றுக்குமான தொடக்கம் ஒரு சிறு புள்ளிதான்.
கடந்த சில வருடங்களாக எனது உறக்கமில்லாத இரவுகள், காயங்கள், போராட்டங்கள், வலிகள், கண்ணீர் எல்லாவற்றுக்கும் ஈடாக இந்த மக்களின் சிரிப்பு அமைந்திருக்கிறது. இது விலை மதிப்பில்லாதது’ என்று ராஷ்மிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரணபலி’ படம் தசரா வெளியீடாக அக்டோபர் 16 அன்று வெளியாக இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட சென்னை மாகாண பெரும் பஞ்சத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில், ஆங்கிலேயரை எதிர்த்துக் போராடும் போராளி ரணபலியாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். அவரது மனைவி ஜெயம்மா கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார்.