‘வாரணாசி’ படத்தின் தெலுங்கு தலைப்பில் மட்டும் சிறிய மாற்றம் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது.
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரணாசி’. இந்தியாவில் தயாராகும் படங்களில் அதிக பொருட்செலவைக் கொண்ட படம் இது என்று கூறப்பட்டு வருகிறது. இதன் தலைப்பு மற்றும் டீஸர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஒருவர், ‘வாரணாசி’ தலைப்பின் உரிமை தன்னிடம் இருப்பதாக புகார் தெரிவித்தார். இதனால் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்றது. இறுதியாக படத்தின் தலைப்பில் மகேஷ்பாபுவின் ‘வாரணாசி’ என்று வைக்க ஆலோசித்தது படக்குழு. ஆனால், அதற்கு மகேஷ் பாபு ஒப்புக் கொள்ளவில்லை.
அவரோ அது ராஜமவுலியின் படம் என்பதால் ராஜமவுலியின் ‘வாரணாசி’ என்று தலைப்பிட கூறியிருக்கிறார். அதையே வைத்துவிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதர மொழிகள் அனைத்துக்கும் ‘வாரணாசி’ என்ற தலைப்பே இருக்கும். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, அடுத்த விளம்பரப்படுத்தும் நிகழ்வில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.