நடிகை ராஷி கன்னா, தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்கமறு’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘அரண்மனை 4’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்தியில் அவர் நடித்துள்ள ‘120 பகதூர்’ சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் ‘உஸ்தாத் பகத்சிங்’ என்ற படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிக்க, கதை கேட்காமல் ஒப்பந்தமானேன் என்று ராஷி கன்னா கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் கதை கேட்காமல் ஒப்பந்தமான ஒரே படம் இதுதான். பவன் கல்யாணின் படம் என்றதும் உடனடியாக சரியென்று சொல்லிவிட்டேன். நான் எப்போதும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். இது அவரது படம் என்பதும் அவருக்குத்தான் அதில் முக்கியத்துவம் என்பதும் எனக்கு தெரியும், அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
பவன் கல்யாண் பெண்களை மதிக்கிறார் என்பது எனக்குப் பிடிக்கும். அடுத்து அவர் சாதாரண மக்களை மிகவும் நேசிக்கிறார். இதையெல்லாம் தாண்டி, அவர் ஒரு நல்ல நடிகர். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். நான் வியந்த விஷயங்களைப் படப்பிடிப்பில் பார்த்தேன். அவர் உயரம் பற்றி அவருக்கே தெரியவில்லை என நினைக்கிறேன்” என்றார்.