’ராக்கா’ ஒரு சாதாரணமான படம் அல்ல என்று இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள படத்துக்கு ‘ராக்கா’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
இதற்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்து வருகிறது.
’ராக்கா’ படத்தின் போஸ்டரை பகிர்ந்து இயக்குநர் அட்லி, “’ராக்கா’ சாதாரணமான ஒரு படம் இல்லை. இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக் கதை என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்” என்று தெரிவித்துள்ளார்.
’ராக்கா’ படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகளுக்காக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் பணிபுரிந்து வருகின்றன. இன்னும் படப்பிடிப்பு இருப்பதால், எப்போது இப்படம் வெளியாகும் என்பதை படக்குழு இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், இப்படத்தை சர்வதேச அளவில் வெளியிட வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.