பிரபாஸ் நடிக்கும் ‘ஃபவுஜி’ படத்தை ‘சீதாராமம்’ படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். இமான்வி கதாநாயகியாக நடித்துள்ள இதில், அனுபம் கெர்,மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தின் முன்னோட்டத்தை ‘ஃபைல் நம்பர் 25’ என்ற பெயரில் படக்குழு வெளியிட்டுள்ளது. பெர்லினில் அடால்ஃப் ஹிட்லரை, சுபாஷ் சந்திரபோஸ் சந்திக்கும் காட்சியுடன் தொடங்கும் அந்த முன்னோட்டம், ‘ஃபவுஜி’ கதாபாத்திரத்தை மாஸாக அறிமுகப்படுத்துகிறது. ‘ஃபவுஜி ’ யாக பிரபாஸ் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் இந்திய உளவாளியாக, போர் வீரராக வருகிறார்.
இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில், சுபாஷ் சந்திரபோஸ், ஜெர்மனியின் ஆதரவை ஹிட்லரிடம் கோருகிறார். இந்தியாவால் பிரிட்டிஷை வெல்ல முடியுமா? என்று ஹிட்லர் கேள்வி எழுப்புகிறார். அதற்குச் சுபாஷ் சந்திர போஸ், ‘சுதந்திரம் அடைவதற்கான உறுதியை ஒருபோதும் அணைக்க முடியாது’ என்று உறுதியாகக் கூறுகிறார்.
ராணுவ வலிமையைவிட உளவுத்துறையை வலிமைமிக்கதாக நிரூபிக்க முடியும் என்று வாதிடும் சுபாஷ் சந்திரபோஸ், கவனமாகத் திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் மூலம் பிரிட்டிஷ் உளவுத்துறைக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவரும் அசாதாரணமான இந்திய உளவாளியின் கதையை அறிமுகப்படுத்துகிறார். அந்த மர்மமான நபர், தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், ராணுவப் படைகளைத் திசை திருப்பி, முக்கியப் பணிகளைச் சீர்குலைத்து, காலனித்துவ நிர்வாகத்தை மீண்டும் மீண்டும் சாமர்த்தியமாக முறியடித்தார் என்று கூறுகிறார்.
அந்த உளவாளி தற்போது கொல்கத்தாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர்கிறார் என்றும் போஸ் விரிவாக எடுத்துரைப்பது போல இருக்கும் அம்முன்னோட்டம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்திரைப்படம், டிச.3- ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர்கள் முதலில் அறிவித்திருந்தனர். இப்போது அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதிக்கு ரிலீஸை மாற்றி வைத்துள்ளனர்.