நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘தி ராஜா சாப்’. சந்துரு இயக்கிஉள்ள இந்த பான்இந்தியா படத்திலிருந்து ‘சஹானா சஹானா’ என்ற 2-வது பாடல் வெளியிடப் பட்டது. இதற்கான நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள லுலு மாலில் நடை பெற்றது. அதில், படத்தில் நடித்த நிதி அகர்வால் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கியது முதலே பாதுகாப்பு தடுப்புகளை மீறி ரசிகர்கள் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது.
நிகழ்ச்சி முடிவடைந்ததும் நிதி அகர்வால், தன்னுடைய காரை நோக்கிச் சென்றபோது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். சிலர் அவரை தொட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நிதி அகர்வாலால் நகரமுடியவில்லை. அங்கிருந்த சில பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை மீட்டு காரில் ஏற்றி வைத்தனர். காருக்குள் அமர்ந்ததும் அந்த அதிர்ச்சியில் இருந்து அவரால் மீளமுடியவில்லை.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சம்பவத்துக்குப் பலர் கண்டனம் தெரிவித்தனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, திட்டமிடுதலோ இல்லாததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக லுலு மால் மற்றும் அனுமதியின்றி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.