இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்யப் பட்டு வெளியான ‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய படங்களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் சரியாகத் திட்டமிட்டு படங்களில் நடித்து வருகிறேன். எதையும் முன்கூட்டியே திட்டமிடுவது எனக்குப் பிடிக்கும். அதன்படி சென்று கொண்டிருக்கிறேன். தென்னிந்திய ரசிகர்களையும் ஏமாற்றக்கூடாது என்று நினைக்கிறேன். பாலிவுட் எனக்குப் பழக்கப்பட்ட துறை என்பதால், நடிகையாக எல்லைகளைத் தாண்டி செல்ல விரும்புகிறேன்.
நான் நடித்துள்ள இந்தி படமான, ‘தோ தீவானே ஷெஹர் மே’ பிப்ரவரியிலும் பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள ‘டெகாயிட்’ மார்ச் மாதமும் வெளியாகிறது.
இதையடுத்து இந்தி படமான ‘யே ஜவானிதோ இஷ்க் ஹோனா ஹே’ வெளியாக இருக்கிறது. இதன் மூலம் ஒரு தெலுங்கு, ஒருபாலிவுட் என சமநிலைப் படுத்த முயல்கிறேன். இது கடினமானது தான். ஆனால் இது நான் கனவு கண்ட ஒன்று என்பதால் அதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்” என்றார்.