துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ள ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற தெலுங்கு திரைப்படம், தமிழில் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ எனும் பெயரில் நவ.20-ல் வெளியாகிறது. விண்வெளிக்குச் செல்ல ஆசைப்படும் பெண்ணின் கதையாக உருவாகியுள்ள இதை பவன் சதினேனி இயக்கியுள்ளார்.
இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நடிகர் துல்கர் சல்மான் கூறும் போது, “இது தெலுங்குப் படமும் அல்ல, தமிழ் படமும் அல்ல; நாட்டின் எந்தவொரு சிறு நகரத்திலும் நடக்கக்கூடிய இந்தியக் கதை. இது சினிமா மீதான உண்மையான காதலாலும் ஆர்வத்தாலும் உருவாக்கப்பட்ட நேர்மையான படம். இப்படத்தின் டீஸர் வெளியானபோது எனக்கு வந்த செய்திகளும் தொலைபேசி அழைப்புகளும் நாங்கள் ஏதோ பெரிய நட்சத்திரங்களுடன் பெரிய கமர்ஷியல் படத்தை எடுத்தது போன்ற உணர்வைத் தந்தன.
அதுதான் சினிமாவின் மாயம். எதையுமே நம்மால் முன்பே கணிக்க முடியாது. நாம் செய்யக் கூடியதெல்லாம் கதையை ஆர்வத்துடனும் காதலுடனும் சொல்வதும் அதை மக்கள் புரிந்துகொண்டு அரவணைப்பார்கள் என்று நம்புவதுமே. இந்தப் படத்தை எங்கள் மகள்கள், சகோதரிகள் மற்றும் மனைவிகளுக்காக உருவாக்கியுள்ளோம்” என்றார்.