தென்னிந்திய சினிமா

“வரலாற்றுடன் புனைவை கலப்பது குற்றம்” - ‘ஃபவுஜி’ டீசர் குறித்து நேதாஜி பேரன் வருத்தம்

ப்ரியா

“வரலாற்றுடன் புனைவைக் கலப்பது குற்றம் எனத் தெரிவித்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரனான சந்திரகுமார் போஸ், பிரபாஸ் நடித்துள்ள ‘ஃபவுஜி’ படம், நேதாஜி - ஹிட்லரின் வரலாற்றுச் சந்திப்பை திரித்துக் கூறியுள்ளதாகவும், அதற்காக படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘ஃபவுஜி’ பட டீசர் குறித்து பதிவர் ஒருவரின் விமர்சனப் பதிவைப் பகிர்ந்து, ‘வரலாற்றுடன் புனைவைக் கலப்பது குற்றம். இயக்குநர் ஹனு ராகவபுடி அவரது  ‘ஃபவுஜி’ படக்குழு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த டீசரை நீக்கி விட்டு, புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு, வரலாறு திரிக்கப்படவில்லை என்பதை  உறுதி செய்வார்கள் என நம்புகிறேன். இந்தப் பதிவை பிரபாஸும் படிப்பார் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நேதாஜியின் பேரன் கூறும்போது, “இந்திய சுதந்திர போராட்டம் பற்றியும், அதன் புரட்சியாளர்கள் குறித்தும் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். ஆனால், பார்வையாளர்களுக்கு சரியான வரலாற்று பார்வை சென்றடைவதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது.

தேசிய அடையாளங்கள், விடுதலைப் போராட்டத் தலைவர்கள் பற்றிய வரலாற்றைக் கையாளும்போது, உண்மைகளைத் திரித்து, அதில் புனைவைச் சேர்த்துக் கூறுவதை ஒரு குற்றமாகவே நான் கருதுகிறேன். சுபாஷ் சந்திரபோஸ், அடால்ஃப் ஹிட்லரைச் சந்தித்தார். ஆனால் அவர் பாசிசத்தை எதிர்த்தார். ஜனநாயகத்தின் மீதும் மக்களுக்கான உரிமைகள் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்.

அந்தக் காலக்கட்டத்தில், இந்திய சுதந்திர போராட்டத்துக்கு ஜெர்மனியின் ஹிட்லரும், ஜப்பானின் ஹிடேகி டோஜோ மட்டுமே உதவ முடியும் என்று அவர் நம்பினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லருடன் உரையாடும்போது தனது தனித்தன்மையுடனே உரையாடினார். ஹிட்லர் தனது சுயசரிதையான மெயின் காஃப் புத்தகத்தில் இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பாரியத்தை அறியாமல் கருத்து  தெரிவித்திருப்பதாக அவரிடம் தெளிவாக எடுத்துரைத்தார்.

சுபாஷ் சந்திரபோஸின் தேசப்பக்தியை ஹிட்லர் அங்கீகரித்தார். அவரை தென்கிழக்கு ஆசியாவுக்கு ஏற்றிச் செல்ல நீர்முழ்கி கப்பல் ஏற்பாடு செய்வது போன்ற உதவிகள் செய்வதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.

‘ஃபவுஜி’ படத்தின் டீசர், நேதாஜி - ஹிட்லர் சந்திப்பைத் திரித்துக் கூறுகிறது.  இரு தலைவர்களும் அவர்களின் தேசத்துக்காக போராடியவர்கள். ஆனால் ஹிட்லர் பின்னாளில் தற்பெருமைவாதியாக மாறிப்போனார்.

இந்தப் படத்தின் நாயகன் பிரபாஸின் பிம்பத்தை உயர்த்துவதற்காக, சுபாஷ் - ஹிட்லர் சந்திப்பில் சுபாஷ் சந்திரபோஸின் ஆளுமை குறைத்துக் காட்டப்பட்டுள்ளது. இதற்காக படத்தின் இயக்குநர், இந்திய மக்களிடமும், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் மீது அன்பு கொண்டவர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

டீசர் கூறுவது என்ன?

பிர​பாஸ் நடிக்​கும் ‘ஃபவுஜி’ படத்தை ‘சீதா​ராமம்’ படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்​கி​யுள்​ளார். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் சார்​பில் நவீன் யெர்​னேனி, ஒய்.ரவிசங்​கர் ஆகியோர் தயாரித்​துள்ள இப்​படத்​தின் முன்​னோட்​டத்தை ‘ஃபைல் நம்​பர் 25’ என்ற பெயரில் படக்​குழு, பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளி​யிட்டு இருந்தது.

பெர்​லி​னில் அடால்ஃப் ஹிட்​லரை, சுபாஷ் சந்​திரபோஸ் சந்திக்​கும் காட்சியுடன் தொடங்​கும் அந்த முன்​னோட்​டம், ‘ஃபவுஜி’ கதாபாத்திரத்தை மாஸாக அறிமுகப்படுத்துகிறது. 

இந்​தி​யாவில் பிரிட்​டிஷ் காலனி ஆதிக்​கத்​துக்கு எதிரான போராட்டத்​தில், சுபாஷ் சந்​திரபோஸ், ஜெர்​மனி​யின் ஆதரவை ஹிட்​லரிடம் கோரு​கிறார். இந்​தி​யாவால் பிரிட்டிஷை வெல்ல முடியுமா? என்று ஹிட்​லர் கேள்வி எழுப்​பு​கிறார். அதற்​குச் சுபாஷ் சந்​திர போஸ், ‘சுதந்​திரம் அடைவதற்​கான உறுதியை ஒருபோதும் அணைக்க முடியாது’ என்று உறுதி​யாகக் கூறுகிறார்.

ராணுவ வலிமையைவிட உளவுத்​துறையை வலிமை மிக்கதாக நிரூபிக்க முடியும் என்று வாதிடும் சுபாஷ் சந்திரபோஸ், கவனமாகத் திட்​ட​மிடப்​பட்ட செயல்​பாடுகள் மூலம் பிரிட்​டிஷ் உளவுத்​துறைக்​குள் பெரும் குழப்​பத்தை ஏற்​படுத்​திவரும் அசாதாரண​மான இந்​திய உளவாளி​யின் கதையை அறிமுகப்படுத்து​கிறார்.

அந்த மர்​மமான நபர், தனது அடையாளத்தை வெளிப்படுத்​தாமல், ராணுவப் படைகளைத் திசை திருப்பி, முக்​கியப் பணிகளைச் சீர்​குலைத்து, காலனித்​துவ நிர்வாகத்தை மீண்​டும் மீண்​டும் சாமர்த்​தி​ய​மாக முறியடித்​தார் என்று கூறுகிறார். இத்​திரைப்​படம், அடுத்த ஆண்டு (2027) மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT