வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் பான் இந்தியா படத்தில் நயன்தாரா, நாயகியாக நடிக்கிறார்.
நயன்தாரா நடிப்பில், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடன்ட், மூக்குத்தி அம்மன் 2 உள்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் இப்போது வரலாற்றுப் பின்னணி கொண்ட படத்தில் அவர் இணைந்துள்ளார். இதில் அவர் ராணியாக நடிக்கிறார்.
பிரபல தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா, நாயகனாக நடிக்கிறார். பிரம்மாண்ட அரண்மனை, போர்க்களக் காட்சிகள் என மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்குகிறார்.
‘சிம்ஹா’,‘ஜெய் சிம்ஹா’,‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ ஆகிய படங்களை அடுத்து நான்காவது முறையாக பாலகிருஷ்ணாவுடன் இணைந்துள்ளார் நயன்தாரா. பாலகிருஷ்ணாவின் 111-வது படமான இதை ‘பெத்தி’ படத்தைத் தயாரிக்கும் வெங்கட் சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிக்கிறார்.
நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படக் குழு அவரது கதாபாத்திர டீஸரை வெளியிட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.