கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் பெங்களுரூ தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரும் நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ”நண்பர்களே நகைச்சுவை ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். எஸ்ஐஆர் மூலமாக பெங்களுரூ தொகுதியில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். நல்ல நகைச்சுவை இல்லையா?
இந்தத் தொகுதியில்தான் நான் பிறந்து, வளர்ந்தேன். இந்தத் தொகுதியில்தான் பள்ளி, கல்லூரி படித்தேன், நாடகங்கள் போட்டேன். உங்களின் தகவலுக்காக, நான் இந்தத் தொகுதியின் எம்.பி வேட்பாளராகவும் இருந்திருக்கிறேன்.
சரி, நல்ல நகைச்சுவை இது. விளையாட்டு ஆரம்பித்துள்ளது. என் வாக்காளர் அட்டையை திரும்ப பெற நான் என்னென்ன நடைமுறைகளை சந்திக்க வேண்டும் என பார்க்கலாம்.
ஆனால், ஒரு சின்ன விஷயம். இனிய நண்பரே... அதிகாரத்தை பயன்படுத்தி உங்களைத் தேர்ந்தெடுக்காதவர்களின் வாக்குரிமையை நீங்கள் தடுக்கலாம். ஆனால் பதவியில் இருந்து உங்களை இறக்கும் எங்களின் சக்தியை தடுக்க முடியுமா? ஒரு பேச்சுக்காக இதைக் கேட்கிறேன்” என்று பேசியுள்ளார்.
கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் கீழ் மாநிலத்தில் உள்ள 5.54 கோடி வாக்காளர்களின் தரவுகள் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, அந்தப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக நிறைவடைந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரகாஷ் ராஜின் இந்த வீடியோ வந்துள்ளது.