கன்னட நடிகையான சப்தமி கவுடா, ‘காந்தாரா’ மூலம் தமிழ் உள்பட மற்ற மொழிகளுக்கும் அறிமுகமானார். பல்வேறு மொழிகளில் நடித்து வரும் அவர், பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் நடிகைகளின் படங்களை சமூக ஊடகங்களில் மோசமாகச் சித்தரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ``பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், பொருத்தமற்ற கோணங்களில் எடுக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. நடிகைகளின் உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் புகைப்படங்களைத் தேவையில்லாமல் பெரிதாக்கிப் பரப்புகின்றனர்.
சில தனிநபர்களின் இந்தச் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அநாகரீகமானது. இதுபோன்ற அப்பட்டமான ஒழுக்க மீறல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது. நிகழ்ச்சிகளைப் பதிவு செய்பவர்கள் அடிப்படை மரியாதை மற்றும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அவருக்கு ருக்மணி வசந்த், ஆஷிகா ரங்கநாத் உள்பட பல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு, ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், நோரா ஃபதேஹி உள்பட பல நடிகைகள் இதே போன்ற புகாரைத் தெரிவித்திருந்தனர்.