தென்னிந்திய சினிமா

‘மோகன்லால் பட நடிகர்கள் தெரிவு’ என போலி விளம்பரம் - படக்குழு எச்சரிக்கை

ப்ரியா

மோகன்லாலின் நடிப்பில் உருவாகி வரும் ‘எல்370’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் பெயரில் போலியாக நடிகர்கள் தெரிவு விளம்பரங்கள் வெளியாகி இருப்பதாக படக்குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாங்கள் அவ்வாறு எந்த ஒரு விளம்பரமும் வெளியிடவில்லை என படக்குழுவினர் தெளிவுபடுத்தி உள்ளனர்.

இது குறித்து படத்தின் இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘எல்370’ படத்தின் பெயரில் வெளிவரும் போலியான விளம்பரங்கள், அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இப்போது நாங்கள் எந்த நடிகர்கள் தெரிவு விளம்பரமும் கொடுக்கவில்லை. அதற்கான அனுமதியையும் யாருக்கும் வழங்கவும் இல்லை.

அந்த மாதிரியான போஸ்டர்கள் அழைப்புகளை நம்பி உங்களுடைய தனிப்பட்ட விஷயங்கள், ஆவணங்கள், பணம் உள்ளிட்டவற்றைப் பரிமாறி ஏமாற வேண்டாம்.

எந்த ஒரு நடிகர்கள் தெரிவுக்கான அதிகாரப்பூர்வ அழைப்பும் எங்களால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளை மட்டும் பின்பற்றுங்கள். மோசடிகள் குறித்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மோகன்லால் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘மீண்டும் ஒருமுறை தயாரிப்பாளர் ஆஷிக் உஸ்மானுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முறை ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில்  ‘எல்370’ படத்துக்காக இணைகிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘துடக்கம்’ படத்தில் மோகன்லாலின் மகள் விஸ்மயா அறிமுகமாகி இருந்தார். மோகன்லாலும் நடித்திருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

ராஜ்கமல்பிலிம்ஸ் விடுத்த எச்சரிக்கை:

இதேபோல் ஒரு போலியான நடிகர்கள் தேர்வு விளம்பரம் குறித்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் கடுமையாக எச்சரித்திருந்தது. இதுகுறித்து அதன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எந்த வகையில் உங்களிடம் வந்து சேர்ந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதி இன்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம்  தெரிவித்துக்கொள்கிறோம்’ எனக் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT