ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான ‘த்ரிஷ்யம்’, மலையாளம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. தனது குடும்பத்தை காப்பாற்ற புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் ஜார்ஜ் குட்டி என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார்.
இப்படம் தமிழில், கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டானது. இப்படத்தின் அடுத்த பாகம் நேரடியாக ஓடிடி-தளத்தில் வெளியானது. இந்நிலையில் இதன் 3-ம் பாகம் இப்போது உருவாகியுள்ளது. இதில் மோகன்லாலுடன் மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இப்படம் ஏப். 2-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்கப் படக்குழு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.