தமிழில் பராசக்தி படம் மூலம் அறிமுகமான தெலுங்கு நடிகையான ஸ்ரீலீலா இந்தியிலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் அவர் நடித்துள்ள படம் ‘உஸ்தாத் பகத்சிங்’. பவன் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள இதில் ராஷி கன்னா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட ஸ்ரீலீலா, ராஷி கன்னாவிடம் சமூக வலைதள ட்ரோலிங் பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஸ்ரீலீலா, கடுமையான விமர்சனங்கள் மற்றும் ஆன்லைன் ட்ரோலிங் காரணமாகத் திரையுலகையே விட்டு விலக நினைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “திரைத்துறைக்கு வந்த புதிதில் ட்ரோல்களை கண்டு அதிகம் அழுதிருக்கிறேன். இது நமக்கான இடமாக இல்லை, மீண்டும் கல்லூரிக்குச் சென்றுவிடலாமா? என்று கூட என் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன்.
அப்போது மென்மையான சுபாவம் கொண்டவளாக, எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவளாக இருந்தேன். தற்போது இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகிவிட்டேன். தேவையற்ற எதிர்மறையான விஷயங்களை மக்களும் நம்புவதில்லை” என்றார்.
ட்ரோலிங் பாதிப்பு பற்றி நடிகை ராஷி கன்னா கூறும்போது, “தற்போதைய சூழலில் ட்ரோலிங், முன்பை விட மோசமாகிவிட்டது. வியூஸுக்காக பலர் கண்டபடி எழுதுகிறார்கள். தங்கள் சுயநலத்துக்காகப் பொய்யான செய்திகளைப் பரப்புகிறார்கள்.
ஒருவரின் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல், மேலோட்டமாகத் தீர்ப்பு வழங்குவது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற ட்ரோலிங்கால் நீண்ட காலம் கஷ்டப்பட்டு உருவாக்கிய நற்பெயர், கெட்டுவிடுமோ என்ற பயம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.