ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூ
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘ரணபாலி’. தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தை ராகுல் சங்கிருத்யன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இதில் ‘தி மம்மி’ என்ற ஹாலிவுட் படம் மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியாக நடிக்கிறார்.
இப்படம் மூலம் அவர் இந்தியாவில் அறிமுகமாகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தில் அவருடைய ‘ஃபர்ஸ்ட் லுக்’-கை வெளியிட்டுள்ள ராகுல் சங்கிருத்யன் படத்தில் அவரின் தாக்கம் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
அவர், “நான் வளர்ந்த காலத்தில் ‘மம்மி’, எனக்கு எப்போதும் பிடித்த படங்களில் ஒன்றாக இருந்தது. அதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்குப் பிடிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த வில்லன் கதாபாத்திரம்தான், கொடியவர்கள் நிஜமாகவே இருக்க முடியும் என்று என்னை நம்ப வைத்தது. பல வருடங்களுக்குப் பிறகு என் சிறுவயதில் எனக்குப் பிடித்த அந்த வில்லனுடன் விதி என்னை நேருக்கு நேர் கொண்டு வந்து நிறுத்தும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.
உங்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்குக் கிடைத்த பாக்கியம். இந்த உலகம் அறிந்த சிறந்த நடிகரையும் தாண்டி, நான் இதுவரை பணியாற்றியதிலேயே மிகவும் அன்பான, கனிவான மற்றும் பொறுமையான கலைஞர் நீங்கள். இந்திய சினிமா என்ற உன்னத உலகுக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன். ‘ஹெக்டர்’ கதாபாத்திரமாக நீங்கள் உருவாக்கியுள்ள அந்த மேஜிக்கை இந்திய ரசிகர்கள் திரையில் காண்பதைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.