கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், கியாரா அத்வானி, நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் வெளியாக இருந்த இப்படம் பின்னர் ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதுபற்றி பேசிய யாஷ், “நிதானமாக இந்த படத்தை வெளியிட வேண்டும் என்ற முடிவை இப்போது எடுத்துள்ளோம். இது, எனது ரசிகர்களுக்கோ அல்லது இந்திய பார்வையாளர்களுக்கோ பிடிக்காது என்பது தெரியும். அவர்கள் வருத்தமடைவார்கள், ஏனென்றால் ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டால், அவர்களின் மனதில் ஒரு காலக்கெடு வந்துவிடும்.
நீங்கள் விரும்பாவிட்டாலும் படம் பற்றி தகவல்கள் வெளியாகி விடுகின்றன. நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கியதில் இருந்தே எதிர்பார்ப்புகளும் தொடங்கிவிடுகின்றன. மேற்கத்திய நாடுகளில் அப்படியல்ல. ஒரு படத்தை முழுமையாக முடித்த பிறகே அனைத்து விளம்பரங்களும் தொடங்குகின்றன. யாரும் படத்தை வாங்க விரும்பினால் முதலில் அந்தப் படத்தைப் பார்க்க விரும்புகிறார்கள்.
ஏனென்றால் மிகப்பெரிய அளவிலான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற விஷயங்கள் சவாலானவை. ஆனால், ரசிகர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.