‘‘முதல்பட தோல்விக்கு பிறகு சினிமா வேண்டாம் என படிக்க போன நான், அப்பாவுக்காக ஒரு படம் மட்டும் பண்ணலாம் என திரும்பி வந்து இன்று 66 படங்கள் முடித்து விட்டேன்’’ என தனது சினிமா பயணத்தின் ஆரம்ப நாட்களை நடிகர் ஃபஹத் பாசில் நினைவு கூர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமாருடன் நடந்த உரையாடல் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெளியாக இருக்கும் தனது, ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயாவுடன் இணைந்து இந்த உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஃபஹத் பாசில், தனது சினிமா பயணம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
‘நீங்கள் நடிக்க வந்து ஒரு 23, 24 வருடங்கள் இருக்குமா?’ என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கேட்ட கேள்விக்கு, ‘இது 24–வது வருடம்; இடையில் ஒரு ஆறு, ஏழு வருடங்கள் இடைவெளி இருந்தது எனக் கூறிய ஃபஹத் பாசில், தொடர்ந்து தனது சினிமா பயணத்தை குறித்து நினைவு கூர்ந்தார்.
அவர் கூறுகையில், ‘அப்பாவின் இயக்கத்தில் நான் நடித்து வெளியான எனது முதல் படம் சரியாக போகவில்லை. அப்போது எனக்கு ஒரு 17, 18 வயதுதான் இருக்கும். அந்த காலக்கட்டத்தில்தான் இந்தியா சினிமாவில் ஹிர்த்திக் ரோஷன் மாதிரியான நிறைய புதுமுகங்கள் சினிமாவுக்குள் வந்தார்கள். பல இயக்குநர்கள் அவர்களின் குழந்தைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்கள்.
முதல் படம் சரியாக போகவில்லை என்பது என்னை மிகவும் பாதித்தது. சரி இது நமக்கு சரிவராது. சினிமா வேண்டாம், கொஞ்ச நாள் விலகி இருக்கலாம் என படிப்பதற்காக அமெரிக்கா சென்றேன். அங்கே பொறியியல், தத்துவம் படித்தேன். அந்தக் காலக்கட்டத்தில் அங்கே நான் சந்தித்த நண்பர்கள் மூலமாக வெளிநாட்டு சினிமாக்கள் எனக்கு அறிமுகமானது.
பிறகு அப்பாவுக்காக ஒருபடம் பண்ண மட்டுமே நான் திரும்பி வந்தேன். அது இப்போது 66 படங்களாகி விட்டது’’ என்று தனது ஆரம்பக்கால சினிமா பயணத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
ஃபஹத் பாசிலின் 66-வது படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. மலையாளம் மற்றும் தெலுங்கில் தயாராகி இருக்கும் இந்தப் படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.