திவ்யபாரதி

 
தென்னிந்திய சினிமா

“ஆழமான பெண் வெறுப்பு” - தெலுங்கு இயக்குநர் மீது நடிகை திவ்யபாரதி குற்றச்சாட்டு

ப்ரியா

ஆழமான பெண் வெறுப்புடன் நடப்பதாக தெலுங்கு இயக்குநர் நரேஷ் குப்பிலி மீது நடிகை திவ்யபாரதி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

தமிழில் ‘பேச்சிலர்’, ‘மகாராஜா’, ‘கிங்ஸ்டன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் திவ்யபாரதி. சமூக வலைதளங்களில் இவரை கணிசமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் தற்போது தெலுங்கில் ’கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை நரேஷ் குப்பிலி இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குநர் நரேஷ் குப்பிலி தன்னை மிக மோசமான வார்த்தையில் குறிப்பிட்டதாக திவ்யபாரதி குற்றம்சாட்டியுள்ளார். நரேஷ் குப்பிலியின் பதிவு தொடர்பான ஸ்க்ரீன்ஷாட் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள திவ்யபாரதி, “பெண்களை ‘சிலகா’ அல்லது வேறு எந்த வார்த்தையாலும் அழைப்பது நகைச்சுவை அல்ல.

அது ஆழமாக வேரூன்றிய பெண் வெறுப்பின் பிரதிபலிப்பாகும். இது ஒரு முறை மட்டுமே நடந்த சம்பவம் அல்ல. இந்த இயக்குநர் படப்பிடிப்பு தளத்திலும் இதே முறையைப் பின்பற்றியுள்ளார். பெண்களை தொடர்ந்து அவமதித்தார்.

தான் நேர்மையாக படைப்பதாகக் கூறும் கலைக்கே துரோகம் செய்துள்ளார். இதனை படத்தின் ஹீரோ அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்ததுதான் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. பெண்கள் கேலிக்கு ஆளாகாத பணியிடங்களை நான் தேர்வு செய்கிறேன். ஒவ்வொரு குரலும் முக்கியம்.

மரியாதையில் சமரசம் செய்ய முடியாத இடங்களை மட்டுமே நான் தேர்வு செய்கிறேன். இது வெறும் தேர்வு மட்டுமல்ல. ஒரு கலைஞராகவும் ஒரு பெண்ணாகவும் இதுதான் எனது நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார். திவ்யபாரதியின் கருத்துக்கு பெண்கள், ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT