மராட்டிய பேரரசை நிறுவிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகிறது.
இதில் ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி, சிவாஜியாக நடிக்கிறார். படத்தை சந்தீப் சிங் இயக்குகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை, எக்ஸ் தளத்தில் ரிஷப் ஷெட்டி வெளியிட்டிருந்தார். அது வரவேற்பைப் பெற்றிருந்தது.
சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை, சாதனைகள் மற்றும் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் 2 பாகமாக உருவாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. முதல் பாகம் 2028-ம் ஆண்டும், 2ம் பாகம் 2029ம் ஆண்டு வெளியாக இருக்கிறது. மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
தற்போது ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் நடித்து வரும் ரிஷப் ஷெட்டி, அந்தப் படத்தின் பணிகளை முடித்த பிறகு இந்த வரலாற்றுப் படத்தின் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார். பிரபல பின்னணி பாடகி ஆஷா போன்ஸ்லேவின் பேத்தி ஜனாய் போன்ஸ்லே இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப் பட்டது. சத்ரபதி சிவாஜியின் மனைவியான ராணி சாய் போன்ஸ்லேவாக அவர் நடிக்க இருக்கிறார்.