நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்ட நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றத்திலிருந்து வெளியே வருகிறார் மலையாள நடிகர் திலீப். படம்: பிடிஐ
எர்ணாகுளம்: போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை விடுதலை செய்து எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த மர்ம கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே அத்துமீறி நுழைந்தது. அங்கு இருந்த நடிகையை மர்மநபர்கள் பாலியல் வன்கொடுமைசெய்தனர்.
இதுதொடர்பாக, அந்த நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில் பெரும்பாவூர் அருகே கூவப்படியை சேர்ந்த பல்சர் சுனி என்ற சுனில் குமார் உள்பட சிலர் அந்த செயலில் ஈடுபட்டதும், அவர் நடிகையின் கார் டிரைவராகவும், உதவியாளராகவும் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது, பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கும், சம்பந்தப்பட்ட நடிகைக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். 85 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திலீப், ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது, “இந்த வழக்குக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. திட்டமிட்டு என்னை சிக்க வைத்து உள்ளனர்” என்று நடிகர் திலீப் தெரிவித்து வந்தார். வழக்கில் மொத்தம் 251 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக பல்சர் சுனியும், 8-வது நபராக திலீப்பும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் சுமார் 8 ஆண்டுகள் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் நடிகர் திலீப் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. மேலும் அவரது நண்பர் சரத் என்பவரையும் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. அரசு சார்பில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த 28 பேர் பிறழ் சாட்சியங்களாக மாறினர்.
தண்டனை விவரம்: பல்சர் சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என்றும் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள 6 பேருக்கும் தண்டனை விவரம் வரும் 12-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் நடிகர் திலீப் மட்டுமல்லாமல், பல்சர் சுனி என்கிற என்.எஸ்.சுனில், மார்ட்டின் ஆண்டனி, பி. மணிகண்டன், விஜேஷ், சலீம், பிரதீப், சார்லி தாமஸ், சனில் குமார் என்கிற மேஸ்திரி சனில், சரத் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில் திலீப், மேஸ்திரி சனில், சரத் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சதித்திட்டம் தீட்டப்பட்டது: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டது என்று வழக்கிலிருந்து விடுதலையான பின்னர் நடிகர் திலீப் பேட்டியளித்தார். அவர் மேலும் கூறியதாவது: நடிகை பாலியல் வழக்கானது எனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம். இந்த வழக்கில் எனக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இவ்வாறு நடிகர் திலீப் தெரிவித்தார்.
வழக்கறிஞர்கள்: இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று நடிகை தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சிக்கியது எப்படி? - இந்த வழக்கில் கைதான நடிகர் திலீப்பின் மனைவி நடிகை மஞ்சு வாரியர். இந்நிலையில் திரைத்துறையில் நடிகர் திலீப்புக்கு, மலையாள நடிகை காவ்யா மாதவனுடன் உள்ள ரகசிய உறவுகளை இன்னொரு நடிகை, மஞ்சு வாரியரிடம் கூறிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு வாரியர், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்டார். தன் மனைவி தன்னை விட்டு பிரி்ந்ததற்கு, குறிப்பிட்ட அந்த நடிகைதான் காரணம் என்று முடிவு செய்த திலீப், கூலிப்படையை பயன்படுத்தி நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்பது போலீஸாரின் குற்றச்சாட்டு.
இதற்கு உறுதுணையாக இருந்தது பல்சர் சுனி என்கிற சுனில் ஆவார். சுனில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். சிறையில் சுனில் இருந்தபோது, நடிகர் திலீப்புக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தைக் கொண்டுதான் திலீப்பை வழக்கில் சேர்த்து போலீஸார் கைது செய்தனர். 2016-ல் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை 2-வதாக திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் திலீப் தமிழில் ராஜ்ஜியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கேரள அரசு மேல்முறையீடு: இந்த வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுவிக்கப் பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ், “நடிகை பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்யும். இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் ஏற்கெனவே பேசி உள்ளேன். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அதன் பின்னணியில் உள்ள சதித் திட்டத்தை ஏன் நிறுவ முடியவில்லை என்பது குறித்து தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இந்த வழக்கில் அரசு முன்வைத்த வாதங்கள் 5 புத்தக தொகுப்பு களாக தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த பக்கங்கள் 1,512. ஆனால், தீர்ப்பு இந்த ஆவணங்களுடனோ அல்லது விசாரணையுடனோ ஒத்துப்போகவில்லை. மாநில அரசு எப்போதும் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நின்றுள்ளது. போலீஸார் இந்த வழக்கை விடா முயற்சியுடன் மேற்கொண்டனர். அரசு தரப்பும், தனது வாதத்தை நீதிமன்றத்தில் வலுவாக வைத்தது” என்றார்.