‘எகோ’ இயக்குநரை நேரில் சந்தித்த போது பாராட்டியிருக்கிறார் தனுஷ்.
சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற மலையாள படம் ‘எகோ’. இப்படத்தினை பார்த்துவிட்டு ‘இது ஒரு மாஸ்டர் பீஸ்’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார் தனுஷ். அதனைத் தொடர்ந்து தனுஷ் – ‘எகோ’ இயக்குநர் தின்ஜித் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தனுஷை சந்தித்தது குறித்து இயக்குநர் தின்ஜித் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “நேற்று தனுஷ் சாரை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. எனது படங்கள் ’எகோ’ மற்றும் ‘கிஷ்கிந்தா காண்டம்’ ஆகியவற்றை மிகவும் பாராட்டினார். மலாத்தியின் நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் ஓர் அற்புதமான கலைஞர் என்று பாராட்டினார். மேலும், அவரை எப்படி இந்தக் கதைக்குள் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டார்.
’கிஷ்கிந்தா காண்டம்’ படத்தில் விஜயராகவனின் பணி அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும், சந்தீப் மற்றும் விஜய ராகவன் இருவருக்கும் தனது வாழ்த்தை தெரிவிக்கச் சொன்னார். தனுஷ் சாரை சந்தித்த இந்த தருணத்துக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார் தின்ஜித்.