தங்கள் ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி திரையுலகினர் வழக்குத்தொடுத்து வருகின்றனர்.
முன்னணி நடிகர்கள் பலர் வழக்குத் தொடுத்து தடையுத்தரவு பெற்றுள்ள நிலையில், பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி அனுப் ஜெயராம் பாம்பனி, ஜான்வி கபூரின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்படும் ஆபாசப் படங்கள், ஆபாச உள்ளடக்கங்கள் மற்றும் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் காணொலிகளை உடனடியாக நீக்க உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர் ஜான்வி கபூரின் வழக்கறிஞர் அசாவ் ராஜன், ரசிகர்கள் உருவாக்கிய தளங்களின் இணைப்புகளில் நடிகையின் ஆபாசமான புகைப்படங்களும் தகாத வார்த்தைகளும் இருப்பதாகவும் அந்தப் பக்கங்கள் நடிகையின் ஆளுமைக் கூறுகளை வணிக ரீதியாகச் சுரண்டு வதாகவும் வாதிட்டு ரசிகர்கள் உருவாக்கிய சுமார் 4 ஆயிரம் இணைய முகவரிகளைச் சமர்ப்பித்தார்.
அவை அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். அந்த மனுவை நிராகரித்த நீதிபதி, சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் கேரிகேச்சர்களும் பொதுவாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்றும் பொதுவெளியில் இருக்கும் யார்தான் விமர்சனங்களில் இருந்து தப்பிக்க முடியும்? நீதிமன்றங்களையே விமர்சிக்கிறார்களே? என்றும் சுட்டிக்காட்டினார்.
விசாரணையின் போது, “ஆளுமை உரிமை என்ற கருத்துரு வரம்பு மீறி சென்று கொண்டி ருக்கிறது. அதற்கு முறையான சட்டப்பூர்வமான சீரான தன்மையை வழங்க வழக்கறிஞர்கள் எனக்கு உதவ வேண்டும்” என்று நீதிபதி கேட்டுக் கொண்டார்.
சமூக வலைதளங்களில் முறையற்ற வணிக நோக்கத்துக்காக நடிகையின் உருவத்தைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றாலும் நியாயமான முறையில் செயல்படும் ரசிகர் பக்கங்கள் மற்றும் விமர்சனங்களை முடக்க முடியாது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.