நடிகர் திலீப்

 
தென்னிந்திய சினிமா

“என் திரை வாழ்வை அழிக்க நடந்த சதி” - தீர்ப்புக்குப் பின் நடிகர் திலீப் எதிர்வினை!

அனலி

எர்ணாகுளம்: பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மலையாள நடிகர் திலீப், ”இந்த ஒட்டுமொத்த வழக்கும் தனது திரைவாழ்வை அழிக்க நடந்த சதி” என்று தெரிவித்தார். மேலும், இதன் பின்னணியில் தனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக, கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப்பை, இன்று (டிச.8) அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுவித்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் திலீப் அளித்த முதல் பேட்டி பின்வருமாறு: முதலில் கடவுளுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள் ஆதரவாளர்களுக்கும் மற்றும் எனக்கு உறுதுணையாக நின்றவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்காக அவர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.

இந்த 9 ஆண்டு கால நீண்ட சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு எனக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் குழுவுக்கு நன்றி. அதேபோல் திரைத்துறை மட்டுமல்லாத பல்வேறு துறை சார்ந்தவர்களும் எனக்கு ஆறுதலாக இருந்தனர். அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு எதிரான இந்தச் சதி, மஞ்சு வாரியரால் தான் தொடங்கி வைக்கப்பட்டது. அவர் தான் என் மீது கிரிமினல் சதி புகார் இருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும் என்றார். அதன் நீட்சியாகவே அப்போது காவல்துறையில் உயரதிகாரியாக இருந்ந ஒருவரும், அவருக்கு இணக்கமான சில காவல் அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்தனர்.

அவர்கள் வழக்கின் பிரதான குற்றவாளி மற்றும் பிற குற்றவாளிகளுடன் இணைந்து எனக்கு எதிராக ஒரு போலிக் கதைகளை உருவாக்கினர். பின்னர் காவல்துறை சில ஊடகங்களோடு கைகோத்தது. அவர்கள் மூலம் என் மீது போலியான செய்திகள் கட்டவிழ்க்கப்பட்டன. சமூக வலைதளங்களிலும் அவை பரப்பப்பட்டன. காவல்துறை இவ்வாறாக கட்டமைத்த போலிக் கதை இன்று நீதிமன்றத்தால் நொறுக்கப்பட்டது. எனது தொழிலை சிதைத்து, என் புகழை சீர்குலைக்க வேண்டும் என்பதே உண்மையான சதி. இவ்வாறு திலீப் கூறினார்.

முன்னதாக, எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்கீஸ், இந்த வழக்கில் நடிகர் திலீப்பை அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுவித்தார். அதேவேளையில், வழக்கில் ஒன்று முதல் ஆறு வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என அறிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப் 8-வது நபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி என்ன? - பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கொச்சி போலீஸார், பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் உட்பட 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாகப் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணையின் போது மொத்தம் 261 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இதில் பல திரைப்படத் துறை பிரமுகர்கள் அடங்குவர். விசாரணை அதிகாரி 109 நாட்கள் விசாரிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் 834 ஆவணங்களை ஏற்றுக்கொண்டது. இரண்டு முக்கிய சாட்சிகளான முன்னாள் எம்.எல்.ஏ பி.டி. தாமஸ் மற்றும் இயக்குநர் பாலச்சந்திர குமார் ஆகியோர் விசாரணையின் போது இறந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT