யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத் அருகே மல்லா ரெட்டி பல்கலைக்கழக மைதானத்தில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது. இதில் யாஷ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவை பார்க்க அப்பகுதி மாணவர்களும் யாஷின் ரசிகர்களும் அங்கு பெருமளவில் திரண்டனர். இதனால் மைதானம் முழுவதும் பெரும் கூட்டம் காணப்பட்டது. விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் காரணமாக திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சில மாணவர்கள் நடிகர், நடிகைகளைக் காண்பதற்காக மேடைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த உயரமான ‘ஸ்பீக்கர் பாக்ஸ்’ மீது ஏறி நின்றனர்.
யாஷ் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த ‘ஸ்பீக்கர் பாக்ஸ்’ திடீரென சரிந்து விழுந்தது. இதில் அதில் ஏறி நின்ற மாணவர்கள் கீழே விழுந்தனர். இதில் ஒரு மாணவி உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்தை உடனடியாகக் கவனித்த நடிகர் யாஷ், பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு, காயமடைந்தவர்களின் பாதுகாப்பு பற்றி விசாரித்தார். நிலைமை சரியானதும் பேச்சைத் தொடர்ந்தார்.
இந்நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாததாக பல்கலைக்கழக நிர்வாகம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் படக்குழுவினர் மீது பேட் பஷீராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.