“சமூகத்தில் நடக்கும் கொடும் குற்றச் செயல்களுக்கு சினிமா வசதியான பலிகடாவாக ஆக்கப்படுகிறது” என இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த மாதம் (அக்.31) ராப்தாடு மண்டலத்தில், 21 வயது இளைஞர் ஒருவர் அரசு பள்ளிக்குள் புகுந்து 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை எலக்ட்ரிக் ரம்பத்தால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துடன் ‘அனிமல்’ படத்தை தொடர்புபடுத்தி இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன.
இவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக ‘அனிமல்’ பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “ஒருவர் கொடுங்குற்ற செயலில் ஈடுபடும்போது அதற்கான முதல் எதிர்வினையாக அனுதாபமும், அதன் பின்னணியில் உள்ள நீண்டகால சிக்கலை புரிந்துகொள்ள முயற்சிப்பதும்தான் இருக்க வேண்டும். சினிமாவில் வசதியான பலிகடாவைத் தேடக்கூடாது.
உங்களின் அக்கறை பாதிக்கப்பட்டவர் மீதோ அல்லது அவர்களின் குடும்பத்தினர் மீதோ இல்லை. மாறாக உங்களின் தனிப்பட்ட பகையைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒரு கொடூரமான துயரச் சம்பவத்தை கீழ்த்தரமாக பயன்படுத்துகிறீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
குறிப்பாக, மற்றவர்களின் படைப்புகளை குறைகூற வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம், திடீரென தங்களை சமூக சீர்திருத்தவாதியாக தங்களை அறிவித்துக் கொள்ளும், தோல்வி அடைந்த, விரக்தியில் இருக்கும், வேலை இல்லாத ஆண்/பெண் நடிகர்கள். சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஒட்டுண்ணிகளுக்கானது இந்தப் பதிவு.
ஓர் கொடூர செயலுக்கு தேவை அனுதாபம்தான், சந்தர்ப்பவாதம் இல்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை கற்றுக்கொள்ளுங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக யூடியூபர் துருவ் ராத்தி, தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆந்திரா பள்ளி சம்பவத்தின் செய்தியை டேக் செய்து, இது போன்ற குற்றங்களுக்கு மாதிரிகளை வழங்கிய ‘அனிமல்’, ‘துரந்தர்’ போன்ற திரைப்படங்களுக்கு சிறப்பு நன்றி என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இதே கருத்துகளை எதிரொலிக்கும் வண்ணம் பதிவுகளை இணையத்தில் பகிர்ந்தனர்.