தென்னிந்திய சினிமா

ஹனுமன் பற்றி தவறாகப் பேசுவதா? - ராஜமவுலி மீது போலீஸில் புகார்

செய்திப்பிரிவு

ஹனுமன் குறித்து தவறாகப் பேசியதாகக் கூறி இயக்குநர் ராஜமவுலி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராஜமவுலி, மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் `வாரணாசி’ படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியங்கா சோப்ரா நாயகியாகவும் பிருத்விராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர். இதன் டைட்டில் அறிவிப்பு நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது டீஸரை அகண்ட திரையில் வெளியிட முயன்ற போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அரைமணி நேரம் நிகழ்ச்சி தடைபட்டது.

பின்னர் மேடை ஏறிய ராஜமவுலி, “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், இங்கே பேசிய என் தந்தை, ஹனுமன் என்னை வழி நடத்துவதாகக் கூறினார். இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது எனக்குக் கோபம் வந்தது. இப்படித்தான் ஹனுமன் எனக்கு உதவுவாரா? என் மனைவிக்கு அனுமன் மீது அதிக பக்தி உண்டு, எனக்கு அவர் மீதும் கோபம் வந்தது என்றார். ராஜமவுலி இப்படிப் பேசியது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராஷ்ட்ரிய வானரசேனா என்ற இந்து அமைப்பினர், ராஜமவுலி இந்துக் கடவுளை அவமதித்து விட்டதாகக் கூறி ஹைதராபாத்திலுள்ள சரூர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளனர். ராஜமவுலி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர்கள், இந்து கடவுள்கள் குறித்து யாரும் தகாத கருத்துகளை வெளியிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT