ராம் சரணின் ‘பெத்தி’ படத்தின் முக்கியமான சண்டைக் காட்சியை பாலிவுட் சண்டைப் பயிற்சி இயக்குநர் ஷாம் கெளஷல் மேற்பார்வையில் படமாக்கி வருகிறது படக்குழு.
புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படம் ‘பெத்தி’. சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியிடப்பட்ட சக்கிரி பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறது படக்குழு.
இந்தச் சண்டைக் காட்சியை பாலிவுட் சண்டைப் பயிற்சி இயக்குநர் ஷாம் கெளஷல் மேற்பார்வையில் படமாக்கி வருகிறது படக்குழு. இவர் பாலிவுட் நடிகர் விக்கி கெளஷலின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சண்டைக் காட்சிகளை நவகாந்த் இயக்கி வருகிறார். இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘தங்கல்’ படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர் ஷாம் கெளஷல் என்பது நினைவுகூரத்தக்கது.
கிராமத்து பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் டிராமா ‘பெத்தி’ ஆகும். இதனை விருத்தி சினிமாஸ் வழங்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரித்து வருகிறது. இதில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். மேலும் சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், எடிட்டராக நவீன் நூலி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக இப்படம் வெளியாகவுள்ளது.