பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வெளியான ‘அகண்டா’ படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. போயபதி ஸ்ரீனு இயக்கிய இதில் பாலகிருஷ்ணா 2 வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகியுள்ளது.
ஃபேன்டஸி ஆக் ஷன் படமாக உருவாகியுள்ள இதில், பாலகிருஷ்ணாவுடன் சம்யுக்தா மேனன், ஆதி, விஜி சந்திரசேகர், ஹர்ஷாலி மல்ஹோத்ரா, ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழிலும் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைப் படக்குழு சந்தித்தது.
நடிகர் பாலகிருஷ்ணா கூறும்போது, “நான் சென்னை யில்தான் பிறந்தேன். என் சொந்த வீட்டுக்கு வந்தது போல உள்ளது. என் அப்பா, என்.டி.ஆர் இங்குதான் வாழ்ந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடன் என் அப்பாவின் நட்பை, அன்பை மறக்க முடியாது. ‘அகண்டா’ முதல் பாகம் வெளிவந்த போது இப்படம் பார்க்க ரசிகர்கள் வருவார்களா? என நினைத் தோம். அது சூப்பர் ஹிட்டானது. இது மாதிரி படங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள் என தைரியம் வந்தது. இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் எனக்கு இது நான்காவது படம். அவருடன் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்.
இந்தப் படம் இந்து தர்மத்தை, கலாச்சாரத்தைப் போற்றும் படைப்பு. நம் பண்பாடுகளை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு, இந்தப்படம். நான் திரையுலகுக்கு வந்து 50 வருடமாகிவிட்டது. அப்பாவின் ஆசியுடன் இன்னும் ஹீரோவாக நடிக்கிறேன். 4 படம் தொடர் வெற்றி. ரசிகர்கள் இம்மாதிரி படங்களுக்குக் காத்திருக்கிறார்கள்” என்றார். இயக்குநர் போயபதி ஸ்ரீனு, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், விஜி சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.