மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘2018’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவர் இயக்கி உள்ள ‘துடக்கம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, தனது பாலிவுட் அறிமுகம் தள்ளிப் போனது பற்றி கூறினார்.
அப்போது, ஆயுஷ்மான் குரானா நடிக்கும் படத்தை இயக்க இருந்ததாகவும் அதில் மோகன்லாலை நடிக்க வைக்க நடந்த பேச்சுவார்த்தையின்போது, அவரை இரண்டாம் நிலை நடிகர் என்று கூறியதால், அப்படத்தைக் கைவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இதனால் சமூக வலைதளங்களில் ஆயுஷ்மான் குரானாவை கடுமையாக விமர்சித்து பலர் பதிவிட்டனர். இது சர்ச்சையானது. இந்நிலையில் ஆயுஷ்மானுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள இயக்குநர், அந்த சர்ச்சைக்குரிய கருத்தை அவர் கூறவில்லை என்று தெளிவு படுத்தியுள்ளார்.
“மோகன்லால் குறித்த கருத்து தயாரிப்பாளர் ஒருவர் கூறியதே தவிர, அந்த நடிகருக்கும் அதற்கும் தொடர்பில்லை. எங்களுக்குள் மிகுந்த மரியாதை உள்ளது. அந்தக் கதையில் அவர் ஆர்வமாக இருந்தார். துரதிர்ஷ்டவசமாக அது கைகூடவில்லை. அது நடக்காததற்கு நிச்சயமாக அவர் காரணமல்ல.
ஆனால், இவ்வளவு திறமையும் தகுதியும் கொண்ட ஒரு நடிகரைச் சந்திக்க முடிந்ததில் உண்மையிலேயே மகிழ்ச்சி. என்றாவது ஒரு நாள் இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஜூட்டின் பதிவுக்கு ஆயுஷ்மான் அளித்துள்ள பதிலில், “உங்கள் படைப்புகளின் ரசிகன் நான்; விரைவில் உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். மோகன்லால் சார் நடிப்பின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் ஒரு ஜாம்பவான். என்றாவது அவருடன் திரையைப் பகிர்ந்துகொள்ளும் தகுதி கிடைக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.