பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இவ்வழக்கில் நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனில் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்துக்குச் சதித் திட்டம் தீட்டியதாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். 74 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு திலீப், ஜாமீனில் வெளியே வந்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் இருந்து நடிகர் திலீப், கடந்த ஆண்டு டிசம்பரில் விடுதலை செய்யப்பட்டார். வழக்கின் முதல் 6 குற்றவாளிகளான பல்சர் சுனி, மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன் பி, விஜயேஷ், சலீம், பிரதீப் ஆகியோருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் திலீப் மற்றும் பலர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை கேரள அரசு வெள்ளிக்கிழமை (பிப்.27) தாக்கல் செய்துள்ளது.
அதில், இவ்வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் தண்டனையை அதிகரிக்கவும், வழக்கில் இருந்து நடிகர் திலீப், சார்லி தாமஸ், சனில் குமார், சரத் ஆகியோரை விடுதலை செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யவும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.