நடிகை பார்வதி
மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் மீண்டும் இணையப் போவதில்லை என்று நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.
நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து மலையாள சங்கமான ‘அம்மா’வில் இருந்து விலகிய சில நடிகைகள் ‘டபிள்யூசிசி’ என்ற அமைப்பை உருவாக்கினர். அதில் நடிகை பார்வதியும் இணைந்திருந்தார்.
இந்நிலையில் ‘அம்மா’ அமைப்பின் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன் அந்த அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நிர்வாகிகள் பலர் ராஜிமானா செய்தனர். இதனால் அங்கு குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் பார்வதி அளித்துள்ள பேட்டியில் ‘அம்மா’வில் மீண்டும் இணையப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இப்போது ‘அம்மா’அமைப்பைத் தீவிரமாக யாரும் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. அந்த அமைப்புக்கென நாங்கள் சில கட்டமைப்புகளை உருவாக்கியிருந்தோம்; அதில் சில உயரிய விஷயங்களை நிலைநிறுத்தி இருந்தோம். அதாவது, ஒரு பெரிய குடும்பம், அனைவரையும் காக்கும் ஒரு ‘பிக் பிரதர்’ பிம்பம் அதில் இருந்தது.
ஆனால், உண்மையில் நிலைமை அப்படி இல்லை என்பது ஏற்கெனவே நிரூபணமாகிவிட்டது. ‘அம்மா’வின் புதிய நிர்வாகம் பற்றி கேட்கிறார்கள். 25 ஆண்டுகளாக அந்தப் பதவியில் இருந்தவர்களுக்கு நல்ல அனுபவம் இருக்கும். ஒரு புதிய நபருக்கு வெறும் ஆறு மாத காலம் மட்டுமே அவகாசம் கொடுத்துவிட்டு, அவர்களிடம் திறமை இல்லை என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
இப்போது என் கவனம் முழுவதும் நடிப்பில் மட்டுமே உள்ளது. ‘அம்மா’ அனைவரையும் மதிக்கும், பாதுகாப்பான, ஆதரவான இடம் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு அமைப்பில் இல்லாமலேயே நான் பாதுகாப்பாக உணர்கிறேன். அதனால் இப்போது எனக்கு எந்த அமைப்பும் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.