நடிகர் திலீப்
பிரபல மலையாள நடிகை ஒருவர், கடந்த 2017-ம் ஆண்டு பிப்.17-ம் தேதி, திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பலால் நடிகை கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். அந்தக் கும்பல் தங்கள் செல்போனில் அதை வீடியோவாக எடுத்தபின், நடிகையை வழியில் இறக்கிவிட்டுத் தப்பியது.
இதுகுறித்து அந்த நடிகை கொச்சி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் பல்சர் சுனில்குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்துக்கு மலையாள முன்னணி நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டினார் என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட திலீப், 85 நாள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் விசாரணை தொடங்கியது. மொத்தம் 216 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இவ்வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் டிச. 8-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹனி எம். வர்கீஸ் அறிவித்துள்ளார். நடிகர் திலீப் உள்பட 9 பேரும் நீதிமன்றத்தில் அன்று ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.