தென்னிந்திய சினிமா

ரசிகர்களுக்கு விபத்து காப்பீடு: நடிகர் அல்லு அர்ஜுன் முன்முயற்சி!

ப்ரியா

நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

‘புஷ்பா’ படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக மாறிய நடிகர் அல்லு அர்ஜுன் ஆண்டுதோறும் ஒருநாளில் தனது  ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி வருகிறார். இந்த ஆண்டுக்கான அல்லு அர்ஜுன் ஃபேன்ஸ் அசோசியேஷன் உறுப்பினர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது, ஹைதராபாத்தில் சுமார் ஆறு மணி நேரம் தனது ரசிகர்களை சந்தித்துப் பேசினார்.

ரசிகர்களுடன் உரையாடல், கைகுலுக்குதல், புகைப்படம் எடுத்தல், விருந்து என வழக்கமான நடிகர் – ரசிகர்கள் சந்திப்பாக மட்டும் இல்லாமல், அல்லு அர்ஜுனின் அன்றைய அறிவிப்பு ஒன்று ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.

அந்தச் சந்திப்பில், தனது ரசிகர்களுக்கு விபத்து காப்பீடு எடுக்கப்பட்டுள்ளதாக அல்லு அர்ஜுன் தெரிவித்தார். இதன்படி அல்லு அர்ஜுன் ஃபேன்ஸ்  அசோசியேஷனில் மாநில அளவிலான உறுப்பினர்களுக்கு ரூ.5 லட்சமும், மாவட்ட அளவிலான உறுப்பினர்களுக்கு ரூ.3 லட்சமும் விபத்து காப்பீடு கிடைக்கும்.

இந்த முன்முயற்சியின் மூலம் அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 900 உறுப்பினர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.

ஒரு முன்னணி சினிமா நட்சத்திரம் தனது ரசிகர்களுக்காக செய்திருக்கும் இந்த முன்னெடுப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தனது வித்தியாசமான முயற்சிக்காக பாராட்ட பெற்ற அல்லு அர்ஜுன், ரசிகர்களுக்கிடையில் இணையத்தில் நடக்கும் சண்டைகள், ட்ரோல்கள் பற்றி பேசிய கருத்துக்காக கடும் விமர்சனத்தையும் எதிர்கொண்டார். 

ரசிகர்களிடம் பேசும்போது, “என்னை நேசிப்பவர்களுக்கும், பிடிக்காதவர்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அவர்களை வெறுப்பதிலும், இணையத்தில் ட்ரோல் செய்வதிலும் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

உங்களிடம் 100 ரூபாய் இருந்தால் பிடிக்காத விஷயங்களை வாங்குவீர்களா? பிடிக்காதவர்களுக்காக உங்களின் நேரத்தை ஒரு சதவீதம் கூட செலவு செய்யாதீர்கள். அதற்கு பதிலாக உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். பிடித்த பெண்ணின் வீட்டு வாசலில் போய் நில்லுங்கள்” என்று பேசியிருந்தார். அல்லு அர்ஜுனின் இந்தப் பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

SCROLL FOR NEXT