நடிகை ராஷ்மிகா மந்தனா, நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ‘மைசா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸ்யமான உலகத்தை மையமாகக் கொண்ட ஆக் ஷன் த்ரில்லர் படமான இதில் ராஷ்மிகாவின் தோற்றம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படத்துக்காக, சாகச நுட்பங்கள் கொண்ட ஆக் ஷன் காட்சிக்கான பயிற்சியை ராஷ்மிகா மந்தனா தாய்லாந்தில் மேற்கொண்டார்.
தினமும் 8 மணி நேரம் அவர் பயிற்சி மேற்கொண்டதாகப் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆக் ஷன் காட்சிக்கான படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வந்தது. இப்போது அது நிறைவு பெற்றுள்ளது. இதை நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
“கேரளாவில் நடைபெற்று வந்த ‘மைசா’ படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். கடுமையாக உழைத்து சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் கண்டிப்பாகப் பேசப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.