தென்னிந்திய சினிமா

திலீப்புக்கு ஜாமீன் கொண்டாட்டம்: ரீமா கல்லிங்கல் மறைமுக சாடல்

ஸ்கிரீனன்

திலீப்புக்கு ஜாமீன் கிடைத்தவுடன் பலரும் அதைக் கொண்டாடினார்கள். இதனை நடிகை ரீமா கல்லிங்கல் மறைமுகமாக கடுமையாக சாடியிருக்கிறார்.

சமீபத்தில் கேரள உயர்நீதிமன்றம் திலீப்புக்கு ஜாமீன் வழங்கியது. இதனை சமூகவலைத்தளத்தில் மட்டுமன்றி கேரளாவில் பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதனை மறைமுகமாக கடுமையாக சாடியிருக்கிறார் ரீமா கல்லிங்கல்.

இது குறித்து ரீமா கல்லிங்கல் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பிப்ரவரி 17 அன்று மிருகத்தனமாக தாக்கப்பட்ட என் தோழி. அன்றிலிருந்து சுற்றி நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் வரும் அவள், இந்த பேஸ்புக் பதிவை எனக்கு அனுப்பினார்.

சிலரது நடவடிக்கைகளால் ஆண்கள் அனைவரையும் நாம் அவமானப்படுத்தக்கூடாது என்றும், நிஜ ஆண்களுக்கு ஆதரவாக நாம் நிற்க வேண்டும் என்றும் அவரிடம் கூறும் கடமை எனக்குள்ளதாக நான் நினைக்கிறேன்.

அவர்களை நாம் காப்பாற்றவும் வேண்டும்.

'புலி முருகன்' படத்தை விமர்சித்ததற்காக ஒரு பெண்ணை ஆபாசமாகத் திட்டும் ஆண்களிடமிருந்து, மோகன்லால் மற்றும் மற்ற உண்மையான ஆண்களுக்கு அவமானத்தை தேடித்தரும் ஆண்களிடமிருந்து நிஜ ஆண்களைக் காப்பாற்ற வேண்டும். நேரலையில் லிச்சியை அழவைத்து மம்முட்டிக்கு அவமானம் தேடித்தரும் ஆண்களிடமிருந்து, இது போன்ற பேஸ்புக் பதிவிடும் ஆண்களிடமிருந்து நிஜ ஆண்களைக் காக்க வேண்டும்.

இதுதான் ஆண்மை, இதுதான் நாயகனுக்கான அடையாளம் என்று நிஜ ஆண்கள் மற்றும் இளம் தலைமுறை நினைக்காமல் காக்க வேண்டும். ஏனென்றால் அவர்களும் இம்மாதிரியான மூளையில்லாத மந்த புத்திக்காரர்களுடன் பழகுகிறார்கள்.

சிறைக்கு வெளியே இனிப்புகள் வழங்கும் 100 பேரும், போலியான பதிவுகளைப் பகிரும் கோழைகளும் உண்மையான ஆண்கள் அல்ல என்பதை என் தோழிக்கும், இந்த உலகத்த்துக்கும் ஒரு சமூகமாக நாம் சொல்ல வேண்டும். இந்த மாதிரி ஆண்களிடம் எங்களுக்கு நட்பு வேண்டாம், காதல் வேண்டாம், வாழ்க்கை வேண்டாம், நேரம் செலவிட வேண்டாம், அவர்களை முழு மனதுடன் நம்பவும் நாங்கள் தயாராக இல்லை.

சமூகத்தில் இருக்கும் உண்மையான ஆண்கள் எழுந்து நில்லுங்கள். வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இவ்வாறு ரீமா கல்லிங்கல் தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT