அகில் பி.தர்மஜனுடன் இணைந்து எழுதி, ஜுட் ஆன்டனி ஜோசப் இயக்கியிருக்கும் மலையாளத் திரைப்படம் '2018' (Everyone is a Hero). 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை பாதிப்புகளையும் அதை எதிர்கொண்ட அம்மக்களின் மன உறுதியையும், வலிகளையும் பேசுகிறது இத்திரைப்படம். இதுபோன்ற பேரிடர் காலத்தில், சிறுசிறு உதவிகளுடன் நீளும் ஒவ்வொரு கரங்களின் சொந்தக்காரரும் உண்மையில் ஹீரோக்கள்தான் என்பதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்.
பேரிடர் குறித்த திரைப்படம் என்பதற்காக இழப்புகள் குறித்து மட்டும் பதிவு செய்து பார்வையாளர்களின் கழிவிரக்கத்தைக் கோராமல், அந்த கையறு நிலையில் சாதி, மதம், மொழி, இனம் கடந்து உதவி செய்ய முன்வரும் ரியல் ஹீரோக்களை குறித்து பேசுகிறது இந்தத் திரைப்படம். பேரிடர் சூழலில் ஒவ்வொருவரும் பிறருக்கு உதவ முன்வர வேண்டியதன் அவசியத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறது.
இந்த ஹீரோக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில், குடும்பப் பிரச்சினைகள், காதல் பிரச்சினைகள், கவுரவ பிரச்சினைகள், ஈகோ பிரச்சினைகள் என எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் ஒரு பேரிடர் இவர்கள் அனைவரையும் எப்படி ஒரே குடையின்கீழ் கொண்டு வருகிறது என்பதை நேர்த்தியாக காட்சிப்படுத்தும் இயக்குநர் ஜுட் ஆன்டனி ஜோசப், தனது கதாப்பாத்திரங்களின் வழியே பார்வையாளர்களின் மனங்களில், மனிதநேயம் எனும் வானவில்லின் வண்ணங்களைப் பூசியிருக்கிறார் .
2018 ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பெருமழை வெள்ளம் வழிந்தோடிய தடங்கள் தோறும் அழுந்தப் பொதிந்திருந்தன அழுகுரல்கள். விழுந்துகிடந்த கட்டிட இடுபாடுகளின் சுவர்கள் சரிந்து சாய்ந்து மனித உடல்களின் மீது ஓய்வெடுத்தன. வீட்டு உபயோகப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் அணைகட்டி நின்றன நீர்வழிகள். இப்படி அந்த பெருமழை, இங்குதான் இருக்கிறாரா? என கோபத்துடன் கேட்கும் அளவுக்கு கலைத்துப்போட்டிருந்தது 'கடவுளின் தேசத்தை'. அச்சமயத்தில் அம்மாநில மீனவர்கள் பலர் அரசுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆர்ப்பரிக்கும் அரபிக் கடலின் பேரலைக்கும், குறுக்கும் நெடுக்குமாகப் பாயும் கேரளத்து ஆறுகளின் ஆழத்துக்கும் பழகிய படகுகள் தார்ச்சாலை வீதிகளில் நகர்வலம் வந்தன. உயிருக்கு ஆபத்தான நிலையிலும், வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களையும் மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். அத்தகைய பேருதவி தருணங்களை நன்றியோடு நினைவுகூர்கிறது இத்திரைப்படம்.
மீனவ சமூக இளைஞனை காதலிக்கும் பெண்ணின் தந்தை ஒருவர், பெண் கேட்டு வீட்டிற்கு வந்த மீனவ குடும்பத்தினரைப் பார்த்து எழுப்பும் கேள்விகள் ஆழ்கடலில் இறக்கப்படும் நங்கூரத்தைவிட கனமானவை. இதற்கு பதிலளிக்கும் விதமாக அடுத்துவரும் காட்சியில் மீனவ குடும்பத்தைச் சேர்ந்த பெண் கதாப்பாத்திரம் பேசும் வசனங்கள் பார்வையாளர்கள் மனதில் இடிபோல் இறங்குகிறது . பேரிடருக்கும் பெருமழைக்கும் சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இருப்பது இல்லை. ஒரேநாள் அனைத்தையுமே தலைகீழாக புரட்டிப்போட்டிவிடும் என்பதை மழை வெள்ளத்தில் சிக்கிய அப்பெண்ணின் குடும்பம் ஒரு மீனவப் படகில் மீட்கப்படும் காட்சியின் வழியே கடத்தியிருக்கிறார் இயக்குநர்.
அருவிக்குளம் கிராமத்தில் இருந்து மழைக்கும் முன் கூடும் கருமேகங்ளுடன் தொடங்குகிறது இத்திரைப்படம். சிறுக சிறுக மழை பெய்யத் தொடங்க, படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் வெவ்வேறு வாழ்வியல் பின்னணியோடு அறிமுகமாகின்றன. போலி மருத்துவச் சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் இருந்து வெளியேறிய இளைஞன், வறட்சியால் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடுகளையும் கேரள பெருமழை பாதிப்புகளையும் தொடர்ந்து பதிவு செய்துவரும் ஒரு பெண் செய்தியாளர், வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற கணவனுக்கும் கேரளத்தில் வசிக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான உரசல்கள், பணி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் பேரிடர் கால கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ஒரு அரசு அலுவலர் அவரது பணிச்சூழலை புரிந்துகொள்ளும் அவரது மனைவியும் குழந்தையும், மீனவ குடும்பத்தில் பிறந்து மாடலிங் துறைக்கு செல்லத் துடிக்கும் இளைஞனும் அவனது காதலும், மீனவராக இருப்பதால் அவரது காதலுக்கு வந்த பிரச்சினை, தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு லோடு ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநரும் அவரது வாழ்வியல் சூழலும், மழைக்காலம் எனத் தெரியாமல் கேரளத்துக்கு வரும் போலந்து நாட்டைச் சேர்ந்த தம்பதிகளும் அவர்களது கைடான கார் டிரைவரும் என இவர்களது ஒவ்வொருவர் வாழ்க்கையும் பெருமழையால் இவர்களது வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்களும், தாக்கங்களும்தான் படத்தின் திரைக்கதை.
தொடர் மழை நாட்களில் அனைவரையும் போல இந்தக் கதாப்பாத்திரங்களும் அவரவர் வாழ்வியல் சூழலுக்கேற்பத்தான் மழையை எதிர்கொள்கின்றனர். தொடர் மழை அடித்து பெய்யத் தொடங்குகிறது. அது பெருமழையாகி, வெள்ளப் பெருக்காகி, பேரிடராக உருமாறும் தருணத்தில் இந்த அனைத்து கதாப்பாத்திரங்களும் ஒருவருக்கொருவர் இணக்கமாகி இறங்கிவந்து உதவிக்கரம் நீட்டும்போது தொப்பலாக நனைந்து போகிறது பார்வையாளர்களின் மனது.
டொவினோ தாமஸ், இந்திரன்ஸ் ,அபர்ணா பாலமுரளி, வினீத் சீனிவாசன், குஞ்சாக்கோ போபன், லால், நரேன், ஆசீப் அலி, தன்வி ராம், ஷிவதா, கலையரசன் என படத்தில் இன்னும் பலருடன் சேர்ந்து, படம் முழுக்க மழை, இடி, வெள்ளத்தையும் முதன்மை பாத்திரங்களாக்கி கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர். மையப் புள்ளியிலிருந்து விலகாமல் செல்லும் படத்தின் கதையோட்டம் படம் முழுக்க பார்வையாளர்களை எங்கேஜிங்காக வைத்திருக்கிறது.
இதுதவிர நோபின் பாலின் இசை, அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு, சாமன் சாக்கோவின் எடிட்டிங் ஒரு பேரிடரை நேரில் சந்திக்கும் அனுபவத்தைக் கொடுக்கின்றன. கருமேகக் கூட்டங்கள், மழை விழும்போது கடந்து செல்லும் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் நாயகி, மழை முழுவதையும் கைக்குடையில் தடுத்துக் கடக்க முயற்சிக்கும் மனிதர்கள், கடல், மீனவர்கள், குடையுடன் மழையில் காதலியோடு செல்போனில் கரையும் உரையாடல்கள், வெள்ள நேரத்தில் வீட்டுக்குள் தஞ்சமடையும் ஊர்வன; என படம் முழுக்க சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் ஏராளம்.
படத்தின் முதல்பாதியில் புயலுக்கு முன் நிலவும் அமைதி போல் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள திரைமொழி பார்வையாளர்களின் கருவிழிப் படலத்தை இடைவெளியின்றி ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இரண்டாம் பாதியில் குறிப்பாக வெள்ள மீட்பு காட்சிகளில் ஒருசில சினிமாத்தனமானங்கள் தென்பட்டாலும் அவை பெரிதாக உருத்தவில்லை. பார்வையற்றவராக வந்து படம் பார்க்க வந்த அத்தனை ஜோடி கண்களையும் அபகரித்துக் கொள்கிறார் இந்திரன்ஸ்.
அதுபோல் ஆண்கள் மட்டுமே பேரிடர் காலத்தில் பெரும்பாலான உதவிகளை செய்யக்கூடிய பலம் பொருந்தியவர்கள் என்பதை இப்படம் நிறுவுகிறது. உண்மை அதுவல்ல, ஆண்களைவிடவும் அதிகமான பணிகளை அத்தகைய தருணங்களில் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் பெண்கள். படத்தில் வரும் பல பெண் கதாப்பாத்திரங்கள் ஆண்களையேச் சார்ந்திருக்கிறது.
அதேபோல் முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறக்காததால் வறட்சியில் வாடும் தமிழக கிராமத்தையும் குடிநீருக்கான போராட்டத்தையும் காட்டிவிட்டு, கேரள அணையை உடைக்க வெடிப்பொருளை எடுத்துச் செல்லும் லாரி டிரைவராக ஒரு தமிழரை காட்டுவது நெருடல். அதுவும் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் லாரியில் வெடி பொருளை எடுத்துவருவது, 2018 பேரிடரின் போது ஓடோடி வந்து உதவிய தமிழ்நாட்டு மக்களின் பேரன்பை இதைவிட கொச்சைப்படுத்திவிட முடியாது என்பதற்கு சமமான கற்பனை அந்த காட்சி. 2018ல் ஒரு மாநிலத்தில் நிகழ்ந்த பெருந்துயரை பதிவு செய்யும்போது அண்டை மாநிலம் குறித்து என்ன மாதிரியான புரிதலை ஏற்படுத்துகிறோம் என்பதில் கவனம் தேவை. இந்த அபத்தங்களை எல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், '2018' உண்மையில் ஆகச் சிறந்த பதிவு.
'Great flood of 99' என்று நினைவுகூரப்பட்டு வந்த 1924-ம் ஆண்டு பெருமழைக்கு பிறகு கேரளத்தில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது கேரளத்தின் 2018 பெருமழை பேரிடர்.மழையால் ஏற்பட்ட வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி 483 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். பலர் மாயமாகினர். இடியுடன் தொடங்கிய படம், படம் முழுக்க பெய்தொழுகி மழை நின்ற நாளில் முடிந்திருந்தாலும், பார்வையாளர்கள் மனதில் பெருமழையின் ஈரத்தை மீண்டும் பரவச்செய்திருக்கிறார் இயக்குநர்.
மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் இதுவரை ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் கதையின் தன்மைக்காக நிச்சயம் இது திரையரங்கில் பார்க்க வேண்டிய திரைப்படம்.