'மெர்சல்' படத்தின் தெலுங்குப் பதிப்பான 'அதிரந்தி' (Adirindhi) படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் நீடித்ததால் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி தொடர்பான வசனம் நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டு, படம் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
'மெர்சல்' தெலுங்கு பதிப்பான 'அதிரந்தி' திட்டமிட்டப்படி தீபாவளியன்று வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டது. அக்டோபர் 27-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் அதிகாரிகள் 'அதிரந்தி' படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை.
இதனால் வெள்ளிக்கிழமை படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்கள் இருப்பதால்தான் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் 'அதிரந்தி' படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனம் மியூட் செய்யப்பட்டது. டிஜிட்டல் இந்தியா குறித்த வசனம் டப்பிங்கில் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) திட்டமிட்டபடி ஆந்திரா, தெலங்கானாவில் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'அதிரந்தி' படம் வெளியாகிறது.