“என்னுடைய சாதிப் பெயரை நீக்கியது குறித்த ஷைன் டாம் சாக்கோவின் கருத்து என்னைக் காயப்படுத்தியது” என்று நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா இயக்கத்தில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் ‘விருபாக்ஷா’. கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்கில் வெளியான இப்படம் நாளை (மே 5) தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இதனை ஞானவேல் ராஜா வெளியிடுகிறார். இந்நிலையில் இப்படத்தின் மலையாள வெர்ஷனுக்கான புரமோஷனின்போது நடிகை சம்யுக்தா பேசுகையில், “என்னுடைய சாதிப் பெயரை நான் நீக்கியது குறித்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ கூறியிருந்தது என்னை காயப்படுத்தியது. நான் அந்த முடிவு மிகவும் முற்போக்கானது. இப்போதும் சாதிப் பெயரை சேர்த்து என்னை அழைக்கும்போது வெறுப்பாக உணர்கிறேன். இன்றும் நான் மற்ற இடங்களுக்குச் செல்லும்போது இந்தப் பெயராலேயே அழைக்கப்படுகிறேன். நான் படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னை சென்றபோதும் சாதிப் பெயரைச் சொல்லியே அழைத்தார்கள்.
அநேகமாக என்னுடைய இந்த முடிவு பலருக்கு புதுமையான விஷயமாக இருக்கும். ஆனால், சமூகத்தில் பலரும் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளனர். அதனால்தான் எனது குடும்பப் பெயரை நீக்க முடிவு செய்தேன். எனவே, அந்த முடிவு குறித்து என்னிடம் கேள்வி எழுப்பும்போது வேதனையாக இருக்கிறது. குறிப்பாக, ஷைன் டாம் சாக்கோ எனது முடிவு குறித்து அதற்கு முற்றிலும் தொடர்பில்லாத ஒன்றுடன் சேரத்து பேசியிருப்பது வருத்ததை அளிக்கிறது” என்றார்.
சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, சம்யுக்தா சிறிய படங்களின் புரமோஷன்களில் கலந்துகொள்வதில்லை என கூறி சாடியிருந்தார். அதில் அவர், “நீங்கள் ஒரு மேனனாகவோ, நாயராகவோ, கிறிஸ்தவராகவோ அல்லது முஸ்லிமாகவோ யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் உங்கள் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும்” என்றது குறிப்பிடத்தக்கது.