2017ஆம் ஆண்டுக்கான அக்கினேனி நாகேஸ்வர ராவ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை கவுரவமாக உணர்வதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி தெரிவித்துள்ளார். இந்த விருது வழங்கும் விழா செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது.
கலை, கலாச்சாரம் மற்றும் வியாபார ரீதியில் சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது.
இது பற்றி ராஜமவுலி, "பெருமைமிக்க ஏஎன்ஆர் விருதைப் பெறுவதில் கவுரவம். இதற்கு முன் விருது பெற்ற சாதனையாளர்களோடு நானும் இருக்கப்போவது என் பாக்கியம்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை, ராஜமவுலி விருது பெறுவதாக நடிகர் நாகார்ஜுனா, அறிவித்தார். சினிமாவில் சிறந்த பங்காற்றியதற்காக ராஜமவுலிக்கு இந்த விருதைத் தருவதில் பெருமை கொள்கிறோம் என்று நாகார்ஜுனா குறிப்பிட்டார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
2005ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதுகளை தேவ் ஆனந்த், ஷபனா ஆஸ்மி, அஞ்சலி தேவி, வைஜெயந்தி மாலா, லதா மங்கேஷ்கர், கே.பாலசந்தர், ஹேமமாலினி, ஷ்யாம் பெனகல் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் இதுவரை பெற்றுள்ளனர்.