தெலுங்கு சினிமா நட்சத்திரமும் ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் குறித்த படத்தை இயக்க உள்ளார் பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா.
இந்த தகவலை உறுதி செய்துள்ள வர்மா, ''என்டிஆரின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆராய்ச்சியின் மத்தியில் இருக்கிறேன். இதில் இன்னும் நிறைய வேலைகள் பாக்கி உள்ளன. ஆயினும் அடுத்த ஆண்டின் இறுதியில் படம் வெளியாகும்'' என்றார்.
கடந்த வாரம் இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் படங்கள் வெளியிட்டிருந்த வர்மா, ''என்டிஆர் குறித்த ஆய்வுக்குப் பிறகு அவரின் வாழ்க்கை வரலாறைப் படமாக எடுப்பதைவிட மனைவி லட்சுமி பார்வதியின் பார்வையில் என்டிஆர் குறித்துச் சொல்வது சரியாக இருக்கும் என்று தோன்றியது.
இப்படம் என்டிஆரின் வயிற்றில் அடித்தவர்களையும் முதுகில் குத்தியவர்களையும் அடையாளம் காட்டும். குறிப்பாக அவரின் இறுதிக் கட்டத்தில் உண்மையாக என்ன நடந்தது என்பதைப் படம் விளக்கும்'' என்று தெரிவித்திருந்தார்.
சர்ச்சைகளுக்குப் பெயர்போன ராம்கோபால் வர்மா முன்னதாக 3 வாழ்க்கை வரலாற்றுப் படங்களை இயக்கியுள்ளார். தற்போது மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றுப் படம் என்றாலும் என்டிஆரின் முதுகில் குத்தியவர்கள் என்று ராம்கோபால் குறிப்பிட்டுள்ளது ஆந்திராவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.